நாட்டின் 13ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்தார்

மஹிந்த ராஜபக்ஸ இலங்கையின் பிரதமராக பதவியேற்ற நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

களனி ரஜமகா விகாரையில் புதிய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

சர்வமதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திர அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

சுப வேளையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார்.

பின்னர் ஜனாதிபதியுடன் விகாரைக்கு சென்று புதிய பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

குருநாகலில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்தார்.

இலங்கை வரலாற்றில், வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஸ, 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக ஆட்சியமைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் தொழில் அமைச்சராக செயற்பட்டார்.

அதன் பின்னர் கடற்றொழில் அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் பல சக்திகளையும் இணைத்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஸ்தாபித்து மீண்டும் ஆட்சியமைத்ததன் ஊடாக 2004 ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ இலங்கையின் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்தார்.

2005 ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அவர், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அபிவிருத்தி இலக்குகளுக்கு தலைமைத்துவம் வகித்து, ஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கையை மாற்றும் பயணத்தை அவர் ஆரம்பித்தார்.

2010 ஆம் ஆண் டுமீண்டும் மக்கள் ஆணையை பெற்ற மஹிந்த ராஜபக்ஸ இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவானார்.