நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது – தியேட்டர்கள் இயங்கலாம்

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், பல்வேறு தளர்வுகளுடன் Unlock நடைமுறையை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், Unlock 4 ஊரடங்கு தளர்வுகள் இன்றோடு (செப்.30) நிறைவடைகின்றன. இந்நிலையில், Unlock 5 ஊரடங்கு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. 

மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள்: 

* அக்டோபர் 15ம் தேதி முதல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கான நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

* பள்ளிகள், பயிற்சி மையங்கள் திறப்பது குறித்து அக் 15ம் தேதிக்கு பிறகு மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்; மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும். 

* மாநிலங்களுக்குள்ளாகவும், மாவட்டங்களுக்குள்ளான போக்குவரத்திற்கும் எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது.; இ.பாஸ் அல்லது சிறப்பு அனுமதி தேவையில்லை.

* கொரோனா கட்டுப்படுத்துதல் பகுதிகளுக்கு வெளியே எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் மத்திய அரசிடம் முன்கூட்டியே கலந்தோசிக்காமல் மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது. 

* சமூக, விளையாட்டு, அரசியல், மத மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி; அதிகபட்சமாக 100 பேர் வரை பங்கேற்கலாம்; உள்ளரங்கில் 50% இருக்கை அளவுடனும், அதிகபட்சமாக 200 பேர் வரையும் பங்கேற்கலாம். 

 நாடு முழுவதும் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் மற்ற இடங்களுக்கு மட்டுமே இந்த புதிய தளர்வுகள் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.