நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை பெறுவோரில், 77 சதவிகிதத்தினர், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மட்டுமே உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிப்பு

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் பூஷண், கடந்த 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளதாகவும், குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிதாக தொற்று உறுதி செய்யப்படுவோரைக் காட்டிலும் குணமடைவோரின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,   கொரோனா தொடர்பான உயிரிழப்புகளில் 48 சதவிகித உயிரிழப்புகள் 25 மாவட்டங்களில் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும், இதில்  15 மாவட்டங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா நோய் தடுப்பு பணியில் உயிரிழந்த 95 முதற்கட்ட பணியாளர்களுக்கு தலா 50 லட்சம் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.