நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் புதிய நடவடிக்கை என்ன?

புதிதாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் நாடாளுமன்ற ஊடக அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சுகாதார சேவைகள் உதவி பணிப்பாளர் லக்ஷமன் கம்லத் தலைமையிலான அதிகாரிகள் நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற கட்டடத்திற்கு விஜயம் செய்து ஆகஸ்ட் 5ம் திகதிக்கு முன்னர் சுகாதார ஒழுங்குவிதிகளில் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதன் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் பார்வையாளர்கள் ஆகியோரை பொதுத்தேர்தலின் பின்னர் பாதுகாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டே அவர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்கு வந்ததாக நாடாளுமன்ற ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, உதவி செயலாளர் நாயகம் உட்பட்டவர்கள் பிரசன்னமாகியிருந்தனர். இதேவேளை புதிதாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர்கள் அனைவருக்கும் PCR  பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டமையின் பின்னரே கன்னி அமர்வு ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.