நாடளாவிய ரீதியில் சமூக இடைவெளி – தென்கொரியா

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகளை தென்கொரியா நடைமுறைப்படுத்தியுள்ளது.

பல மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இறுக்கமான கட்டுப்பாடு இருந்தபோதும் நாட்டில் வேகமாக மோசமடைந்து வரும் நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று முதல், மத வழிபாடுகள் போன்ற பெரிய கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இரவு விடுதிகள், மதுபான நிலையங்கள், இணைய சேவை நிலையங்கள் மற்றும் கடற்கரை செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இந்த நடவடிக்கைகள் தலைநகர் சியோலுக்கு மட்டுமே அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் புதிய நோயாளிகளின் அதிகரிப்பு காரணமாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை நள்ளிரவு நிலவரப்படி 397 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.