நடிகர் விஜயின் பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்!

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளராக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பெயரும், தேர்தல் ஆணையத்தின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக பத்மநாபன் என்பவரின் பெயர், பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் பெயரில் தொடங்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தொடர்பாக, எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நியூஸ் 7 தமிழ் தொடர்புகொண்டு கேட்டபோது, அரசியல் தொடர்பாக விஜயிடம், நான் எப்போதும் ஆலோசிப்பது இல்லை என்றும், கட்சியில் இணைந்து பணியாற்றுவது குறித்து, விஜய்தான் முடிவு செய்ய வேண்டும், என்றும் தெரிவித்தார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் விஜய், எனக்கும், எனது தந்தை தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில், எனது தந்தை மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் என்னை கட்டுப்படுத்தாது என்றும், தந்தையின் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லை என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், எனது தந்தை கட்சி ஆரம்பித்தார் என்பதற்காக, அவரது கட்சியில் ரசிகர்கள் பணியாற்ற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சிக்கும் நமது இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஜய், எனது பெயரையோ புகைப்படத்தையோ தவறாக பயன்படுத்தினால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்துள்ளார்.