நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் – சமூக வலைத்தளத்தில் பரவும் தகவலுக்கு உறவினர்கள் மறுப்பு!

தனியார் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலமாக அறிமுகமாகி பல சின்னத்திரை தொலைக்காட்சிகளில் அசத்தி வந்த நடிகர் வடிவேல் பாலாஜி, சென்னை சேத்துப்பட்டு எம்.எஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

 இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அம்மருத்துவமனையில் 10 முதல் 12 தினங்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேல் பாலாஜி இன்று மதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

பணப்பற்றாகுறை?

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பணப்பற்றாக்குறை காரணமாகவே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பகிரப்பட்டது. 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவரது உறவினர்கள் வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சையாலேயே அவர் உயிரிழந்தாகவும் பணம் இல்லாததால் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொய்யான தகவல் பரவி வருகிறது என தெரிவித்தனர். மேலும் அவரது சிகிச்சைக்காக 18 முதல் 20 லட்சம் வரை செலவு செய்தும் காப்பாற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்த உறவினர்கள் பணத்தை பறிக்கவே தனியார் மருத்துவமனை முயற்சி மேற்கொண்டதாலேயே
 இறுதியில் அரசு மருத்துவமனையை நாடி சென்றோம் என கண்ணீர் மல்க கூறினர். 

வடிவேல் பாலாஜியின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு நாளை மதியம் 2 மணிக்கு இந்து முறைப்படி நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.