தொடர் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத் நகரம்!

தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஹைதராபாத் நகரம், இந்தாண்டில் இரண்டாவது முறையாக கடும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. ஹபீஸ் பாபா நகர், பூல்பாக், உமர் காலனி, இந்திரா நகர், சிவாஜி நகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள், வெள்ளத்தில் மிதக்கின்றன.

சாலைகளில் ஆற்று வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கனமழைக்கு இரண்டு சிறார்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் மட்டும் 37 ஆயிரம் குடும்பங்கள், வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தின் பல இடங்களில் வரும் 21ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தெலுங்கானா, ஆந்திராவை போல கர்நாடகாவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குல்பர்கா மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பீமா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.