தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் ஒரு கடுமையான ஊரடங்கிற்கு தயாராகும் பிரிட்டன்!

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்  ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. இங்கு நோய் பாதிப்பு  கண்டறியப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவுகள்  பிறப்பிக்கப்பட்டன. ஆனால் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  தொடந்து அதிகரித்து வந்தது. இதனை அடுத்து அந்நாடு மேற்கொண்ட துரிதமான  பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அங்கு மே  மாதத்துக்கு பின்னர் நோய் பாதிப்பு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டது. இதனை  தொடந்து ஜூன் மாதம் முதல் அந்நாட்டின் பல்வேறு கட்ட தளர்வுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கூட்டமாக 6 பேருக்கும் மேல் பங்கேற்க  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டின் சுகாதாரத்துறை  அமைச்சர் மாட் ஹான்காக், ஐரோப்பாவில் கொரோனாவால் அதிகம்  பாதிக்கப்பட்டுள்ள நாடாக பிரிட்டன் உள்ளது. வடக்கு இங்கிலாந்தில் பாதிப்பு  அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.  கொரோனா வைரஸால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  ஒவ்வொரு எட்டு நாட்களுக்கும் இரட்டிப்பாகி வருவதை நாங்கள் காண்கிறோம்  எனவே நாங்கள் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

நாங்கள் ஒரு தேசிய ஊரடங்கை தவிர்க்க விரும்புகிறோம், ஆனால்  தேவைப்பட்டால் அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். உயிர்களைப்  பாதுகாப்பதற்கும், வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும் எதை  வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் அவர்  தெரிவித்துள்ளார். 

இதனிடையே பிரிட்டனின் நார்தம்பர்லேண்ட், வடக்கு மற்றும் தெற்கு  டைன்சைட், நியூகேஸில்-அப்-டைன், கேட்ஸ்ஹெட் மற்றும் கவுண்டி டர்ஹாம்  உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்  நடைமுறைக்கு வந்தன.