தேசிய கல்விக் கொள்கையை பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது-தமிழக உயர்கல்வித்துறை

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து, சாதக, பாதகங்களை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை வழங்க உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.  இக்குழு கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து கருத்துக்களைப் பெற்று அதன் அடிப்படையில் தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அபூர்வா கமிட்டியின் அறிக்கையை ஆராய்ந்த தலைமைச் செயலாளர் சண்முகம், தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசின் கொள்கைக்கு முரணாக உள்ள பட்டப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு உள்ளிட்ட 5 அம்சங்களை அமல்படுத்த முடியாது என மத்திய கல்வி அமைச்சகத்துக்கு கடந்த அக்டோபர் 5-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். 

தமிழக தலைமைச் செயலாளரின் கடிதம் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு UGC கடந்த 20-ம் தேதி உத்தரவு அனுப்பியுள்ளது. UGC-யின் உத்தரவையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செயலாளர் அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனை முடிவில், தமிழக அரசின் கடிதம் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதால் UGC-இன் உத்தரவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து பதில் கடிதம் வந்த உடன் முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.