தென்னிந்திய திருச்சபை முறிகண்டி ஆலயத்தின் 39வது ஆண்டு நிறைவு சிறப்பு வழிபாடு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது

தென்னிந்திய திருச்சபை முறிகண்டி ஆலயத்தின் 39வது ஆண்டு நிறைவு சிறப்பு வழிபாடு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. குறித்த வழிபாடு நேற்று இரவு 7 மணியளவில் திருச்சபை குரு அருட்பண செயஸ்ரியான் அன்றனி தலைமையில் இடம்பெற்றது. 1981ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த திருச்சபை முன்பள்ளி, சிறுவர் இல்லம், தொழில் பயிற்சி நிலையம் உள்ளிட்ட பொது பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. நேற்று இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டில் திருப்பலியினை கிளிநொச்சி பிராந்திய குருமுதல்வர் வணபிதா பத்மதயாளர் மற்றும் திருச்சபை குருவானவர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். இதேவேளை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட திருச்சபை குருவானவர்கள் திருச்சபை மக்கள் உள்ளிட்ட பலரும் திரு வழிபாட்டில் பங்கு கொண்டனர்.

முறிகண்டி தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண பேராயத்தின் கீழ் பல்வேறு பணிகளை முன்னெடுத்த வருகின்றது. 1981ம் ஆண்டு திருச்சபை பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பத்தில் பாலர் பகல் பராமரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டதுடன், 1994ம் ஆண்டு சிறுவர் இல்லமும் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த சிறுவர் இல்லம் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடையும்வரை குறித்த பகுதியில் இயங்கி வந்தது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் குறித்த இல்லத்தில் வளர்ந்த பிள்ளைகள் தமது உறவினர்களுடன் இணைக்கப்பட்டனர். தொடர்ந்தும் முன்பள்ளி மற்றம் தொழிற்பயிற்சி ஆகியன இடம்பெற்று வருகின்றது. யுத்தத்தினால் கட்டடங்கள் பல சேதமாகியுள்ள போதிலும், இருக்கின்ற இட வசதிகளை கொண்டு பொது பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.


39வது ஆண்டை நிறைவு செய்து புதிய ஆண்டிற்குள் நுழையும் முறிகண்டி திருச்சபைக்க தென்னிந்திய திருச்சபையின் பேராயரும், அமெரிக்கன் இலங்கை மிசன் தலைவருமான பேரருட்திரு டானியல் செல்வரத்தினம் தியாகராஜா வாழ்த்து செய்தியை வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். திருச்சபையின் பணிகள் சமூகத்தோடு ஒருமித்து பயணிக்கவும், சமூகத்தில் உள்ள சிறுவர்களின் கல்வி, இளைஞர் யுவதிகளின் தொழில்விருத்தி சார்ந்த செயற்திட்டங்கள், போதைப்பொருள் பாவனையற்ற சமூகம் ஆகியவ்றை கட்டியெழுப்பக்கூடியதாக தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் எனவு்ம, திருச்சபையில் பணியாற்றிய மற்றும் பணியாற்றும் ஊழியர்கள் திருச்சபை மக்களிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பேராயரின் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.