துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்ட மருத்துவ மாணவர்: செல்ஃபி எடுக்கும்போது நேர்ந்த விபரீதம்!

பீகார் மாநிலம் கோபல்கஞ்ச் மாவட்டத்தின் மாஞ்சா கர் பகுதியில் உள்ள இமாலியா கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ஓம் பிரகாஷ் சிங். இவரது 17 வயது மகன் குணால் ராஜஸ்தானில் மருத்துவம் படித்து வந்துள்ளார். இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் உள்ள குணால் தன் தந்தையின் துப்பாக்கியை வைத்து செல்ஃபி எடுக்க முற்பட்டுள்ளார். அவர் துப்பாக்கியை தலையில் வைத்து செல்ஃபி எடுக்க முற்படும்போது செல்போனை கிளிக் செய்வதற்கு பதிலாக துப்பாக்கியை கிளிக் செய்துள்ளார். இதில் தலையில் குண்டு பாய்ந்த குணால் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். 

பின்னர் துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குணாலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் குணால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த குணாலின் உறவினர்களும் கிராமத்தினரும், மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் காட்டிய அலட்சியமே மாணவனின் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி மருத்துவர்கள் சிலரை தாக்கியுள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாஞ்சா கர் காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.