தீபாவளி பண்டிகை: கோயம்பேட்டில் இருந்து நேற்று மட்டும் 2 லட்சம் பேர் அரசுப்பேருந்துகளில் பயணம்!

தீபாவளி பண்டிகை நாளை  கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து நேற்று முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தீபாவளி சமயத்தில் வழக்கமாக இருக்கும் கூட்டத்தைவிட,  பொதுமக்களின் கூட்டம், குறைவாகவே இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பேருந்துகளில் எப்போதும் நிரம்பி வழியும் கூட்டம் இல்லாமல், பயணிகளுள் இருக்கைகளில் முகக்கவசம் அணிந்து பயணித்தனர். சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு எளிதாக பேருந்துகளில் இடம் கிடைத்ததால்,  மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. 

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், துணிகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிகளவில் குவிந்தனர். பொதுமக்கள் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை காட்டிலும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாக  இயக்கப்பட்டன.  தீபாவளி பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.