திருப்பத்தூரில் திடீரென தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்..!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் சீனிவாசன் (45). இவர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து, ரயில் அல்லது கார் மூலம் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊர் திரும்ப முடியாது என நினைத்த அவர் ஹெலிகாப்டரில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து, கோவையில் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு இயக்கும் சுனில் என்பவரை தொடர்பு கொண்டு, அவரது ஹெலிகாப்டரில் சீனிவாசன், அவரது மனைவி கவிதா (40), இரு மகன்கள், மகள் என மொத்தம் 5 பேர் கோயம்பத்தூரில் இருந்து இன்று (அக். 18) காலை 7.45 மணியளவில் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டனர்.

இவர்கள் சென்ற ஹெலிகாப்டரை 2 பைலட்கள் இயக்கினர். ஆனால் செல்லும் வழியில் மேகம் கடும் மேகத்துடன் காணப்பட்டதால் பைலட், ஹெலிகாப்டரை தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டம்  தாதன்குட்டை என்ற பகுதியில் பைலட்கள் ஹெலிகாப்டரை பத்திரமாக தரை இறக்கி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். மேலும் ஹெலிகாப்டர் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பின்னர் காலை 11 மணியளவில் மேகம் தெளிவானவுடன் ஹெலிகாப்டர் மீண்டும் திருப்பதி நோக்கி பயணித்தது.