தாய்லாந்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டமையைக் கண்டித்தும் போராட்டம்

தாய்லாந்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டமையைக் கண்டித்தும் பல்லாயிரக் கணக்கானவர்கள் தலைநகர் பங்கொக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பதும்வான் (Pathumwan) நகரில் போராட்டக்காரர்களின் பேரணி சென்றபோது கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக்கப்பட்ட நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து, போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதுடன் நீர்த் தாரைப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், கடும் மழைக்கு மத்தியிலும் பேரணி நடைபெற்றுவருவதுடன் இன்று இரவுடன் பேரணியை முடிவுக்குக்கொண்டுவரும் அறிவிப்பு ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் பிரதமர் பதவி விலகவேண்டும், புதிய அரசியல் சாசன சட்டம் இயற்றப்பட வேண்டும், முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும், மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இயக்கம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தொடர் போராட்டங்களைக் கட்டுப்படுத்த நேற்று வியாழக்கிழமை காலை அவசரகால நிலையை பிரதமர் அறிவித்தார்.

அத்துடன், போராட்டங்களை நிறுத்துமாறு அவர் வலியுறுத்திய நிலையில், தற்போது அவசரகால நிலைக்கு எதிராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பிரதமர் பதவி விலகும்வரை போராட்டங்கள் நிறுத்தப்படாது என போராட்டக்காரர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா தான் இராஜினாமா செய்ய மாட்டேன் என இன்று அறிவித்துள்ளார்.

அத்துடன், புதிய அதிகாரங்களைப் பயன்படுத்த அரசாங்கம் தயங்காது எனவும் போராட்டக்காரர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.