தாக்குதல் நடத்த சதி: அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது!

பாகிஸ்தானை சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் மேற்கு வங்கத்திலும், 3 பேர் கேரளாவிலும் கைதாகியுள்ளனர்.

இந்தியாவின் முக்கிய பகுதிகளில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு, மக்களை கொலை செய்ய இந்த கும்பல் சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தேசிய புலனாய்வு முகமை கைப்பற்றியுள்ளது. டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலில் ஈடுபடும் நடவடிக்கைகளில் இந்த கும்பல் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக அவர்கள் நிதியை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.