தற்போதைய நிலைப்பாடுகளை அமைதியாக இருந்து நோட்டமிடுகின்றோம்

தற்போதைய நிலைப்பாடுகளை நாம் அமைதியாக இருந்து நோட்டமிட்டு வருகின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுர்தீன் தெரிவித்தார்.


வவுனியா வெளிக்குளத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
சிறுபான்மை சமூகத்தின் குரலாக நாம் என்றும் ஒலிப்போம். எதிர்காலத்தில் ஒற்றுமையுடன் சிறுபான்மை சமூகம் பயணிக்க வேண்டிய தேவைப்பாட்டை நாம் உணர்கின்றோம். அவ்வாறு செயற்படும் பொதுதான் நாம் எமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தலாம். எனவே சகோரதரர் அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் எமது கட்சியின் முக்கியஸ்தர்களாக இருந்தாலும் சில நூறு வாக்குகளால் அவர்கள் இருவரையும் நாம் இழந்துவிட்டோம்.


தேசியப்பட்டியல் ஒன்றினை தருவதாக சஜித் பிரேமதாசா அணியினர் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் அவர்களுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் குறைவாக காணப்பட்டதனால் என்னையும் சகோதரர் மனோ கணேசன், திகாம்பரம், ரவூப் ஹக்கீம் ஆகியோரை அiழைத்து எமது கட்சி ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றது. 54 நாட்களில் அமைக்கப்பட்ட கட்சி 54 ஆசனங்களை பெற்றிருக்கின்றது. ஆகவே இக்கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் எனவே தேசியப்பட்டியலை எமக்கு விட்டுத்தாருங்கள் என எம்மிடம் கேட்டார்கள். எனவே நாம் அந்த விடயத்தில் மென்மை போக்கை கடைப்பிடித்தோம்.


எந்த தேர்தலிலும் நான் முகம்கொடுக்காத அளவு இம்முறை என்னை பெரும் துன்பத்திற்குள்ளாகியிருந்தனர். எனது சகோதரனை எந்த காரணமும் இன்றி சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
என்னை விசாரணை என துன்பப்படுத்தியதுடன் எனது குடும்பத்தினருக்கும் பெரும் கஸ்டங்களை கொடுத்தனர். என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்டிவிட முயற்சித்தார்கள். இந்த தேர்தல் தொகுதியில்தான் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தார்கள். அது மாத்திரமின்றி அரசாங்க தரப்பில் போட்டியிட்ட ஒரு சில வேட்பாளர்கள் தேர்தலுக்கு மாத்திரமே இந்த மாவட்டத்திற்கு வந்திருந்தார்கள். பல கோடிகளை கொண்டு வந்து கொட்டினார்கள். எமக்கு எதிரான பொய் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்
இரண்டு சதாப்தமாக நாம் இந்த அரசியலில் இருக்கின்றோம். மிகவும் அமைதியாக தற்போது நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றோம். எமக்கு அபிவிருத்தியை விட எமது சமூகத்தின் தன்மானம் முக்கியம் என்பதனையும் எமது சமூகத்தின் இருப்பு முக்கியம் என்பதனையும் பாதுகாப்பு முக்கியம் என்பதனையும் எமது வரலாற்று சந்ததியினரினுடைய எதிர்காலம் முக்கியம் என்பதனையும் எமது மனத்தில் நாம் இருத்திக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே அபிவிருத்தி வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இந்தவகையில் நாம் அதற்கான பாதையை வகுத்து செயற்படுவோம். மக்களினுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.