தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையை எதிர்பார்க்கிறேன்!! சாள்ஸ்

வடகிழக்கில் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் அரசியல் விடிவிற்காக இணைந்து பயணிக்கவேண்டும். அந்த ஒற்றுமையை தான் எதிர்பார்த்து நிற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியா சாளம்பன் பகுதியில் நேற்று  மாலை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

கூட்டமைப்பானது கடந்ததேர்தலில் 16 ஆசனங்களைபெற்றுக்கொண்ட நிலையில் இம்முறை 10 ஆசனங்களையே பெற்றுள்ளது.வன்னியில் கூட ஒரு ஆசனத்தை இம்முறை நாம் இழந்திருக்கின்றோம். 
இந்ததேர்தலில் ஆட்சியாளர்கள் அதிகாரபலம் மற்றும் பணபலம் என்பவற்றைபயன்படுத்தியிருந்தார்கள். அதனை விட எம்மவர்கள் பிரிந்துநின்று இந்த தேர்தலை சந்தித்தார்கள். இப்படியான சூழலிலும் கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைத்து தமிழ் உறவுகளிற்கும் எனது நன்றியைதெரிவித்துக்கொள்கின்றேன்.

இம்முறை தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகள் தேசியகட்சிகளிற்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அது ஏன் என்பதை எம்மால் இன்னும் ஊகிக்கமுடியவில்லை. எமது கட்டமைப்புகளை சிதைப்பதற்கு அவர்கள் தயாராகஇருக்கின்ற நிலையில் சிலர் ஏன் இவ்வாறான மனநிலையில் இருந்தார்கள் என்பது வேதனையான விடயமாக இருக்கின்றது. எமக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளை நாங்கள் புரிந்துகொள்ளாத நிலையில் இருந்திருக்கிறோம். கடந்ததேர்தலில் எனக்கு கிடைத்த விருப்புவாக்குகள் கூட இம்முறை குறைந்தே காணப்படுகின்றது. எனவே தேர்தல்முடிவை ஒரு பாடமாகவே நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்வில் கூட தனிச்சிங்கள கொடியை பறக்கவிட்டு இந்த நாடு சிங்கள பௌத்தர்களிற்குரியது என்ற செய்தியை அவர்கள் சொல்லியிருககின்றார்கள். ஆட்சியாளர்களின் செயற்பாடு தமிழ் மக்களை அச்சம் கொள்ளவைத்துள்ளது.
அத்துடன் வடகிழக்கில் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் அரசியல் விடிவிற்காக இணைந்து பயணிக்கவேண்டும் என்பது எனது விருப்பம். அந்த ஒற்றுமையை நான் எதிர்பார்த்து நிற்கின்றேன்.

இதேவேளை தமிழர்களின் அரசியல் தீர்வு விடயம்தொடர்பில் இருக்கின்ற அரசாங்கத்தோடு பேசுவதற்கு நாம் பின்னிற்கவில்லை. தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் யாப்புமாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாக பிரதமருடனான சந்திப்பில் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். எனவே பாராளுமன்றம் கூடியபின்னர் எமது கோரிக்கைகளில் மிகப்பிரதானமான விடயமாக இந்தவிடயம் இருக்கும்.
அந்தவகையில் வடகிழக்கில் எமது மக்கள் தனித்துவமாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலைஉருவாகவேண்டும் அதுவரைக்கும் நாம் உழைக்கவேண்டும் என்றார்.