தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ் நாட்டின் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, கோவை, திருவள்ளூர், வேலூர், கடலூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழ் நாட்டில் மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோரப் பகுதியில் நேற்று உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது கிழக்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளதாக இந்தியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடலை நோக்கி நகரும் 
என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவிற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.