தமிழக விமான நிலையங்களில் முதல் அறிவிப்பு தமிழில் இருப்பதற்கு நடவடிக்கை!

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்  பாண்டியராஜன்  மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அத்துறையின் செயலாளரை சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களிலும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழில் இடம்பெற வேண்டும் என விமானத்துறை அமைச்சரிடம் தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். 


தமிழகத்திற்கு வரும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்புகள் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விமான நிறுவனங்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என ஹர்தீப் சிங் பூரி தம்மிடம் தெரிவித்ததாக பாண்டியராஜன் கூறினார். அலுவல்மொழி சட்டத்தில் தமிழும் இடம் பெற வேண்டும் என மத்திய அலுவல் மொழி செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜன், அலுவல்மொழி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என தாம் நம்புவதாகவும் கூறினார்.