தமிழகத்துக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய சிங்கள நபர் ஒருவர் கைது – கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என இந்திய உளவுத்துறை தீவிர விசாரணை

தமிழகத்துக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய சிங்கள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவமானது கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என இந்திய உளவுத்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் போதை பொருட்கள் கடத்தல் தங்கம் அல்லது சட்ட விரோத ஊடுருவல் போன்ற சட்ட விரோத நடவடிக்கை நடைபெற உள்ளதாக ராமேஸ்வரம் கடலோர காவல் ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த  ரகசிய தகவலயடுத்து தனுஸ்கோடி  அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முகுந்தராயர் சத்திரம் அருகே கம்பிபாடு என்ற கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரிக்க போலீசார் முற்பட்ட போது அந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றுள்ளார். பின்னர் அவரை மடக்கி பிடித்த மெரைன் போலீசார் ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

  கைது செய்யப்பட்ட நபர் இலங்கை மொனாராகலை மாவட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய பிரதீப்குமார பண்டாரநாயக்க என விசாரணையில் தெரிவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மெரைன் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பிடிப்பட்டவர் இலங்கை காவல்துறையை சேர்ந்தவர் எனவும், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள துறைமுக காவல் நிலையத்தில் 2018 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து பைப்பர் படகு ஒன்றில் சர்வதேச கடல் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எதற்காக இவர் தமிழகத்திற்க்குள் நுழைந்தார் என்பது குறித்து  தமிழக கடலோர காவல் குழும போலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி மெரைன் காவல் நிலையத்தில் வைத்து  விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்நிலையில் சமீப காலமாக தனுஸ்கோடி கடல் பகுதியில் இருந்து கஞ்சாவும் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளும் கடத்தப்பட்டு வருகிறது. எனவே பிடிபட்ட இலங்கை நபருக்கு கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக ராமேஸ்வரம் வந்தனாரா என்ற கோணத்தில் உளவுத்துறை அதிகாரிகள் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்து வருகின்றனர்.