தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து ஆரம்பம்

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, பயணிகள் பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதேபோல் பல்வேறு சிரமங்களை அவர்கள் பயணத்தின் போது அனுபவித்து வருகிறார்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட 95% லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வந்துவிட்டது. பேருந்துகள் இயங்க தொடங்கிவிட்டது, இ பாஸ் ரத்து செய்யப்பட்டுவிட்டது, அதேபோல் அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் தொடங்கிவிட்டது. இன்னொரு பக்கம் நேற்று ஞாயிற்றுக் கிழமை தமிழகம் முழுக்க மக்கள் திருவிழா போல வெளியே வந்தனர். கூட்டம் கூட்டமாக வெளியே வந்து பார்க், பீச்களில் தங்கள் ஞாயிறுகளை கழித்தனர்.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் தற்போது பேருந்து சேவை மாவட்டங்களுக்கு இடையே தொடங்கி உள்ளது. மாநில விரைவு போக்குவரத்து பேருந்து சேவை உட்பட அனைத்து பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளது. 166 நாட்களுக்கு பின் முழுமையாக இப்படி மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கி உள்ளது. இடையில் ஜூன் – ஜூலை 1ம் தேதி வரை 8 மண்டலங்களுக்கு இடையில் மட்டுமே பேருந்து போக்குவரத்து இருந்து, பின் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கிய நிலையிலும் கூட பலருக்கு இணையத்தில் டிக்கெட் புக் செய்ய முடியவில்லை. தனியார் புக்கிங் தளங்களில் பெரும்பாலான அரசு பேருந்துகள் காட்டப்படவில்லை. இன்னொரு பக்கம் தமிழக அரசின் எஸ்இடிசி புக்கிங் தளத்திலும் புக்கிங் செய்ய முடியாமல் மக்கள் கஷ்டப்பட்டு உள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து புக்கிங் துவங்கியது. ஆனால் இன்னும் பலரால் சரியாக பேருந்துகளில் புக்கிங் செய்ய முடியவில்லை. நேற்று இரவு வரை பேருந்து புக்கிங் செய்ய முடியாமல் பலர் கஷ்டப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் விரைவு பேருந்துகள், சாதாரண பேருந்துகள் தொடங்கி மொத்தமாக மாவட்டங்களுக்கு இடையே 1800 பேருந்துகள் மொத்தமாக இயக்கப்படுகிறது.

1200க்கும் அதிகமான விரைவு பேருந்துகள் உள்ள நிலையில் 520 விரைவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் சென்னைக்கு செல்லவும், சென்னையில் இருந்து திரும்பவும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மொத்தமாக குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதும் புக்கிங் செய்ய முடியாததற்கு, சரியாக இடம் கிடைக்காததற்கும் காரணம் என்கிறார்கள்

அதிலும் 22 பேர் மட்டுமே 40+ இருக்கை உள்ள பேருந்துகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதுவும் கூட டிக்கெட் கிடைக்காமல் போவதற்கு காரணம் என்கிறார்கள். ஒரு பக்கம் மக்கள் டிக்கெட் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் சில பேருந்து நிலையங்களில் கூட்டம் வரவில்லை என்று கடைசி நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அதிகம் வந்தால் மட்டுமே பேருந்துகளை இயக்குவோம் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் புக்கிங் செய்த சிலரும் கூட பேருந்து செல்லுமா என்ற குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்தை மேற்கொள்வதில் மக்களுக்கு நிறைய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் தமிழகத்தில் பேருந்து சேவைகள் தொடங்கி உள்ள நிலையில் பேருந்துகள் எல்லாம் மொத்தமாக சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது. வழியில் பேருந்துகள் நிற்க கூடாது என்பதற்காக மொத்தமாக பேருந்து சர்வீஸ் செய்யப்பட்டு, பணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. போக போக குழப்பங்கள் தீர்ந்து பேருந்து சேவை முழுமையாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.