தமிழகத்தில் தொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பும் நீர் நிலைகள்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக மாநிலமும் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில்
நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3  நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தடுப்பணையை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. களக்காடு மலையில் உள்ள நெட்டேரியன்கால், கருங்கல் கசம் அருவிகளிலும், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 


கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், நட்சத்திர  ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதேபோல் குன்னூரில் தொடர் மழை காரணமாக ரேலியா அணை முழு கொள்அளவை எட்டியுள்ளது. குன்னூர் நகராட்சி உட்பட்ட 30 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்வதில் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இதனால் வாரத்திற்கு ஒரு முறைக்கு பதிலாக தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.