தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது – அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் சிறப்பான செயல்பாடுகளால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 10ல் இருந்து 6 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1 புள்ளி 6-லிருந்து 1 புள்ளி 3 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக தெரிவித்தார். இதனை மேலும் குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். கொரோனா பாதிப்பு குறைந்தாலும், இது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். 

இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய, ஐசிஎம்ஆர் கிளைகள் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அந்த குழு வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதன் உச்சம் தொட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றும், பாதுகாப்பு முறைகள் தொடர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டால், பிப்ரவரி இறுதிக்குள் குறைந்த கொரோனா பாதிப்புகளுடன் தொற்றானது கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று முடிவடையும் காலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 5 லட்சமாக இருக்கும் என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.