தமிழகத்தில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி பா.ஜனதா திடீர் போர்க்கொடி : அதிமுக கடும் அதிருப்தி

கூட்டணிபாஜக,அதிமுகநிலைதமிழ்நாடு சென்னை: தமிழகத்தில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பா.ஜ திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனால் அதிமுக கடும் அதிருப்தியடைந்துள்ளது. தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. முதல்வர் எடப்பாடியும், கொரோனா தடுப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வதாக கூறினாலும், தேர்தல் பணிக்காக அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவே சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கட்சிக்குள் கருத்துமோதல் எழுந்துள்ளது. இப்பிரச்னையில் அதிமுக முன்னணி தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜ துணை தலைவராக உள்ள வி.பி.துரைசாமி, நேற்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் பாஜவுக்கும் இடையேதான் போட்டி. பாஜ தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று கூறியிருப்பது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜ துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, சென்னை கமலாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் திமுக – அதிமுக என்ற நிலை மாறி, திமுக – பாஜ என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் பாஜ தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். நாங்கள் இருக்கின்ற பக்கம் தான் நிச்சயம் வெல்லும். பாஜவை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அவர்களுடன் கூட்டணி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக பாஜ தலைவர் முருகன் தான். அந்த கட்சியில் கருத்து சுதந்திரம் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் பேசுவார்கள். பாஜ மாநில தலைவர் முருகன் சொன்னால் அதற்கு நாங்கள் பதில் அளிப்போம். வி.பி.துரைசாமி கூறியதை பா.ஜ.வின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. மாநில தலைவர் முருகன் சொல்லித்தான் செய்தியாளர்களை சந்திப்பதாக துரைசாமி சொல்கிறார். திமுக – பாஜவுக்கு இடையேதான் வரும் தேர்தலில் போட்டி என்று பாஜ மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் சொல்ல சொன்னாரா? அப்படி எதுவும் அவர் சொல்லவில்லை.டெல்லி பாஜ தலைமையும், மாநில பாஜ தலைமையும் அதிகாரப்பூர்வ கருத்தை சொன்னால், அதன்பிறகு எங்கள் பதிலை சொல்கிறோம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மத்திய பாஜவின் அறிவுரைபடியே தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனாலும் அதை அதிமுக முக்கிய நிர்வாகிகள் மறுத்து வந்தனர். மத்திய பாஜ அரசுடன் நல்ல உறவு மட்டுமே வைத்திருப்பதாக தெரிவித்து வந்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாஜவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதில் ஒரு தொகுதியில் கூட பாஜ வெற்றிபெறவில்லை.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜ இருக்கக்கூடிய சூழ்நிலையில், திடீரென இனி தமிழகத்தில் பாஜ தலைமையில் தான் கூட்டணி என்று வி.பி.துரைசாமி அதிரடியாக அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் பாஜ கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். அதேபோன்று, பல்வேறு வழக்குகள் உள்ள ரவுடிகளும் பாஜ கட்சியில் இணைக்கப்பட்டு வருகிறார்கள்.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவும் 2021ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் அதாவது சட்டமன்ற தேர்தலுக்கு முன் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்து விடுவார். அப்போது, அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சசிகலா பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதை பயன்படுத்தி பாஜவும் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுதான் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், தமிழக பாஜ தலைவர் முருகன், வி.பி.துரைசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் அனுமதியுடன்தான் தமிழகத்தில் கூட்டணி பற்றி பாஜ தனது கருத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.* ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மத்திய பாஜவின் அறிவுரைபடியே தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.* கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாஜவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஒரு தொகுதியில் கூட அது வெற்றிபெறவில்லை.* எஸ்.வி.சேகர் சிறைக்கு செல்வார்அதிமுக கட்சி கொடியில் அண்ணாவின் உருவப் படத்தை நீக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘நடிகர் எஸ்.வி. சேகர், சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாகவும் இதே நிலை தொடர்ந்தால் சிறைக்கு செல்லும் அவரின் ஆசையை அதிமுக அரசு நிறைவேற்றும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.