தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அதில், ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது. இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, புதுவை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன்  காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக திருத்தணியில் 9 செ.மீ மழையும், கோவை மற்றும் திருப்பத்தூரில் தலா 7 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளிலும், கேரளா,கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.