தமது கட்சியில் போட்டியிட அழைத்த விக்கி, பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் சொன்னார்!! சத்தியலிங்கம் தெரிவிப்பு.

முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அண்மையில் என்னிடம் வந்து  தங்களது கட்சியில் இணைந்து தேர்தலில் நிற்குமாறும், சத்தியலிங்கம் குற்றமற்றவர் என்று பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் சொன்னார் என்று முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில்  இடம்பெற்றதேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டுகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

வவுனியா வடக்கு பிரதேச சபையில் இருக்கின்ற 26 உறுப்பினர்களில் 10 பேர் வேற்றுமொழி பேசுகின்றவர்கள். அவர்கள் எங்கிருந்து யாரால் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்களா? அவர்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சம்மந்தம். எமது மாவட்டத்தின் இனவிகிதாசாரத்தை மாற்றுவதற்காக போர்காலத்திலும் அதற்கு பின்னரும் இங்கு அழைத்துவரப்பட்டு குடியேற்றப்பட்டவர்களே அவர்கள்.
எமது பூர்விக கிராமமான ஊஞ்சல்கட்டி பகுதி மகாவலி எல் வலயத்தின் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த காணிகளின் உறுதிகளை ராணுவ முகாமில் கொண்டுவந்து வழங்குமாறு அந்த பகுதி மக்களுக்கு தெரிவிக்கின்றனர். இவ்வளவு நடந்துகொண்டு இருக்கும் போது நாம் சாப்பாட்டு பாசலுக்காக மொட்டுச்சின்னத்திற்கு பின்னாலே திரிகின்றோம்.

எங்களுடைய மண் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. சிங்கள குடியேற்றம் தனிக்கல் மட்டும் வந்திருக்கின்றது. நாம் மொட்டுக்கும், யானைக்கும் பூனைக்கும் பின்னால் திரிந்தால் அது நெடுங்கேணி வரைக்கும் வரும். இதை நாம் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றோம்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்பு வடக்கு பிரதேச சபையிலே தவிசாளரை தேர்வுசெய்யும் போது எமது மண்ணிலே தேசியம் பேசி 20 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களிடம் நாம் மன்றாடிக் கேட்டோம். வடக்கு பிரதேசசபையை கைப்பற்றுவதற்காக பலதடவைகள் மன்றாடி கேட்டோம். அவர்கள் வரவில்லை, இறுதியில் நாணயம் சுண்டியே எமக்கு அந்த சபையை ஆளும் நிலமை உருவாகியது. அவர்கள் முதலில் பூவில் வந்தார்கள் பின்னர் வீட்டிற்கு வந்தார்கள். இடையில் சூரியனுக்கு சென்று தற்போது மீனிலே நிற்கின்றார்கள், இறுதியில் கருவாடாகி போவார்கள். 

இன்று பலகட்சிகள் உருவாகியுள்ளது. தமிழரசுக்கட்சியுடன் ஒன்றாக இருக்கமுடியாது என்று பிரிந்து போனவர்கள் நூறுகட்சிகளை உருவாக்கியிருக்கின்றார்கள். தங்களது சொந்தப்பிரச்சினைகளிற்காக, வெளியில் சென்றவர்கள் கொள்கை முரன்பாட்டால் வெளியில் சென்றார்களாம். அப்படி சென்றாவது ஒற்றுமையாக இருந்தீர்களா? பத்து கட்சி பத்து சின்னம் வைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.
வன்னி மண்ணை நாம் பறிகொடுக்க போகின்றோமா? எங்களை  நாங்களே ஆளக்கூடிய அதிகாரத்தை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம். பல கட்சிகள் இருக்கின்றது ஆனால் கூட்டமைப்பு மாத்திரமே வடகிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக வரக்கூடியவர்கள். எனவே கூட்டமைப்பின் மூலம் அதிகூடியவர்களை பாராளுமன்றம் அனுப்பவேண்டும்.

வவுனியாவில் ஒரு ஆசனத்தை தாருங்கள் சிங்கப்பூர் ஆக்கிகாட்டுவதாக டக்ளஸ் கூறுகின்றார். அவர் 25 வருடங்கள் பாராளுமன்றத்திலே இருந்தவர். மூன்றுமுறை அமைச்சராகவிருந்தவர். அவருக்கு வாக்குப்போட்டு பாராளுமன்றம் அனுப்பிய யாழ் மக்களுக்கு அவர் செய்த நிலைபேறான அபிவிருத்தி ஒன்றினை சொல்லமுடியுமா. ஒரு தொழிற்சாலையை அமைத்தீர்களா அல்லது போரிலே சிதைவடைந்த தொழிற்சாலைகளை திருத்தியாவது வழங்கினீர்களா. இல்லையே, தற்போது வன்னியில் வந்து போலிகதைகளை பேசுகின்றீர்கள்.

வடக்கு மாகாணசபையில் சுகாதார அமைச்சராக இருந்து வடக்கிலே ஒரு சுகாதார புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றேன். 25 வைத்தியசாலைகளை அமைத்துள்ளேன். இலங்கையில் முதன்முதலாக இலவச நோயாளர்காவு வண்டி சேவையை ஆரம்பித்தவன் நான். இதன் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர். நாங்கள் செய்து காட்டியிருக்கின்றோம்.

வடக்கு மாகாண சபை சத்தியலிங்கம் குற்றமற்றவர் என்று ஏகமனதாக தீர்மானத்தை கொண்டு வந்தது. அதனை முன்னாள் முதலமைச்சரே நேடியாக கூறினார். ஆனால் அவரை சுற்றியிருப்பவர்கள் விடவில்லை. அதனால் நான்கு வருடத்துடன் எனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்தேன்.
இதே முன்னாள் முதலமைச்சர் தேர்தலில் தங்களது கட்சியில் இணைந்து கொள்ளும்படி அண்மையில என்னிடம் கோரினார். எங்களிடம் போதிய காசு இருக்கின்றது. நீங்கள் ஒரு சதமும் செலவளிக்க தேவையில்லை. என்னோடு வந்து சேருங்கள் சத்தியலிங்கம் குற்றமற்றவன் என்னை சூழல் அப்படி சொல்லவைத்தது என்று பகிரங்கமன்னிப்பு கேட்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்று சொன்னார்.
இவர்கள் தான் என்னை கள்ளன் என்று கூறியவர்கள். இப்படியானவர்களை எமது மாகாணசபைக்கு கொண்டு வந்தது எங்களின் பிழையே. அவரது வயதுக்கு மரியாதை கொடுப்பவன் நான். எனது தகப்பனை போன்றவர் அவர். ஆனால் கேட்பார் கதையை கேட்டு சொந்த பேச்சை கேட்காமல் இருந்த ஒரு முதலமைச்சர் அவராகத்தான் இருப்பார் என்றார்.