தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- அஜித் ரோஹண

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளமையால் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் குறித்த தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் மீறி பெரும்பாலானோர் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே அஜித் ரோஹண இவ்வாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த தினங்களில் பொதுப்போக்குவரத்தில் உரிய முறைமையில் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் பின்பற்றப்படவில்லை.

மேலும் பொது இடங்களிலும், வரிசைகளிலும் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை பொதுமக்கள் பின்பற்றாத நிலைமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.பொதுமக்கள் தொடர்ந்தும் இவ்வாறாக செயற்படுவார்களாயின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.