தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு இருந்தும் இந்திய இளம் வீரர் எடுத்த முடிவு பிசிசிஐ அளித்த விளக்கம்

உடல் நலக்குறைவால் காலமான தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க பிசிசிஐ ஏற்பாடுகள் செய்தும், இந்திய வீரர் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் IPLல் சன் ரைசர்ஸ் அணியில் அறிமுகமாகி, இந்தாண்டு RCB அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் ஆடவுள்ளது.

இதற்காக கடந்த 13-ம் தேதி இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றடைந்தனர். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முகமது கோஸ் (53) கடந்த வெள்ளிக்கிழமையன்று உடல் நலக்குறைவால் காலமானார். இதைக்கேட்டு முகமது சிராஜ் இடிந்துபோனார். ஏனெனில், முகமது சிராஜின் தந்தை முகமது கோஸ், ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டு தனது மகனை வளர்த்து இந்த நிலைக்கு கொண்டு வந்தார். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றுள்ள வீரர்கள் அனைவரும் தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளதால், தந்தையின் இறுதிச்சடங்கில் முகமது சிராஜ் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பிசிசிஐ அவரை இந்தியா அனுப்ப ஏற்பாடுகள் செய்தும் முகமது சிராஜ், அதற்கு மறுப்பு தெரிவித்ததாக பிசிசிஐ அறிக்கை விட்டுள்ளது. ‘சிராஜின் தந்தை காலமானதும் நாங்கள் அவருடன் கலந்து ஆலோசித்தோம். அப்போது இந்த துயரமான நேரத்தில் அவர் இந்தியா திரும்பவும், குடும்பத்தோடு இருக்கவும் வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் அவர் இந்திய அணியோடு இருக்க விரும்புவதாகவும் சொல்லிவிட்டார்’ என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது தனது தந்தையின் கனவு என்றும், அதனால் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இருப்பதே உகந்தது என்று முகமது சிராஜ் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தந்தை உயிரிழந்தபோதும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற சிராஜின் முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆர்சிபி அணியில் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை முகமது சிராஜ் வீழ்த்தியிருந்தார்.