தடுமாறும் ஐரோப்பா

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் போராடி வரும் நிலையில் மூன்று மாதங்களின் பின் ஜெர்மனியில் நாளாந்த நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,200 நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விடுமுறை நாட்கள் முடிந்திருக்கும் நிலையிலேயே தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்பெயினின் சில பகுதிகளுக்கு அத்தியாவசிமற்ற பயணங்களை தவிர்ப்பதற்கு ஜெர்மனி நாட்டு மக்களை அறிவுத்தி இருக்கும் நிலையிலேயே அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 2,524 கொவிட்–19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மே மாதம் பொது முடக்க நிலை தளர்த்தப்பட்ட பின் அந்நாட்டில் ஒரு நாளில் பதிவான அதிக நோய்த் தொற்று சம்பவம் இதுவாகும்.
எனினும் மேற்கு ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நாடாக ஸ்பெயின் காணப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு மேலும் 1,418 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.