தங்களது மகள், கணவர் வீட்டில் மகிழ்ச்சியுடன் உள்ளார் என நினைத்த பெற்றோருக்கு தெரியவந்த அதிர்ச்சி தகவல்!

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பானுசந்தருக்கும், பேரளம் பகுதியைச் சேர்ந்த ராதாவுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. பானுசந்தர் – ராதா தம்பதிக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்து வந்தாலும், மாப்பிள்ளை வீட்டார் கேட்ட நகைகளை குறையில்லாமல் கொடுத்து, மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார் தாய் மகேஸ்வரி. ஆனாலும், கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு, ராதாவை, கணவர் பானுசந்தரும், பெற்றோரும் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் தான், பானுசந்தரின் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், மகேஸ்வரியை தொடர்பு கொண்டு, ராதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மகேஸ்வரியும், அவரது உறவினர்களும், பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால், ராதாவின் கணவரும், அவரது பெற்றோரும் மருத்துவமனைக்கு வராமல் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ராதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு வரதட்சணை கொடுமையே காரணம் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளார். 

ராதாவின் மரணத்திற்கு காரணமான கணவனையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்த ராதாவின் சடலத்தை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே  ராதாவின் கணவர் பானுசந்தர், அவரது பெற்றோர் உள்ளிட்டோரை கைது செய்தால் மட்டுமே ராதாவின் சடலத்தை உறவினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.