ட்ரம்பா? பைடனா? இன்று நடைபெறுகிறது அமெரிக்க அதிபர் தேர்தல்!

கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் களம் காணுகிறார். கொரோனா பரவல், இனப்பாகுபாடு ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பிரச்னைகளாக முன் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்தவகையில் 8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தி இருக்கின்றனர். அதேபோல் தேர்தல் நாளான இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.