டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்காக காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

பண்டிகை கால ரிலீஸ் பட்டியில் உள்ள புதிய டொயோட்டா அர்பன் க்ருஸர் எஸ்யூவிக்கு முன்பதிவு எப்போது துவங்கப்பட உள்ளது என்ற விபரம் வெளியாகி இருக்கிறது.

மாருதி கார்களை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் முறையில் மாற்றம் செய்து விற்பனை செய்கிறது. முதல் மாடலாக ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலுக்கு ஓரளவு நல்ல வரவேற்பு உள்ளது. டொயோட்டாவுக்கு முதலீடு இல்லை என்பதுடன், மாருதிக்கு ராயல்டி வருவதால், இந்த தொழில் யுக்தி நன்றாக அமைந்துவிட்டது.

இதையடுத்து, தற்போது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து கொண்டு வர இருக்கிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் வர இருக்கும் இந்த மாடலின் அறிமுகம் கொரோனாவால் சற்றே தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், அடுத்த மாதம் 22ந் தேதி டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட உள்ளதாக ரஷ்லேன் தள செய்தி தெரிவிக்கிறது. இதைத்தொடர்ந்து, வரும் செப்டம்பரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிலிருந்து பெரிய மாற்றங்கள் எதுவும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் இருக்காது. அதேநேரத்தில், லோகோவில் மாற்றங்கள் மற்றும் உட்புறத்தில் சிறிய மாற்றங்களுடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட தேர்விலும் எதிர்பார்க்கலாம்.

கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அடிப்படையில்தான் புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் உருவாக்கப்பட்டு இருக்கும். எனவே, அனைத்து சிறப்பம்சங்களும் ஒன்று போலத்தான் இருக்கும். புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், புதிய அலாய் வீல்கள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கும் போட்டியை கொடுக்கும். கியா சொனெட் எஸ்யூவியும் இதற்கு நிகரான ரகத்தில் வர இருக்கிறது.