டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை அறிவித்தது ஒஸ்திரிய அரசாங்கம்

டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இரண்டரை வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் இரண்டாவது நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஒஸ்திரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவல் விரைவாக அதிகரிப்பதைத் தடுக்கும் முயற்சியின் ஒருபகுதியாக ஒஸ்திரியர்கள் தங்கள் வீட்டுக்கு வெளியில் யாரையும் சந்திக்க வேண்டாம் என அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும்போது பாடசாலைகள் மூடப்படும் என்றும் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை புதிய தொற்றின் அழுத்தத்தின் கீழ் சுகாதார சேவை வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு இது என்று ஒஸ்திரியாவின் சுகாதார அமைச்சர் ருடால்ப் அன்சோபர் கூறினார்.

ஒஸ்திரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை 9 ஆயிரத்து 586 புதிய தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்ப அலையின் உச்சத்தை விட ஒன்பது மடங்கு அதிகம் என கூறப்படுகின்றது.தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து நாட்டில் 191,000 க்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 1,661 கோவிட் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.