டாஸ்மாக் ஊழியருக்கு கொரோனா உறுதி… பீதியில் மதுப்பிரியர்கள்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க வரும் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து முண்டி அடித்துக் கொள்வது தற்போது வாடிக்கையாகி வருகிறது. டாஸ்மாக் பணியாளர்கள் பொதுமக்களை சமூக இடைவெளி கடைபிடிக்க வலியுறுத்தினாலும் காவல்துறையினர் இல்லாத காரணத்தால் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் பணியாளர்களிடம் வம்பு செய்வதாகவும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம் கையுறை போன்றவை கூட நிர்வாகத்தால் வழங்கப்படுவதில்லை என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தருமபுரியில் டாஸ்மாக் ஊழியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் மதுப்பிரியர்கள் பீதியடைந்துள்ளனர்.  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அக்கடையை மூடி சீல் வைத்தனர். டாஸ்மாக் கடை பணியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த சில தினங்களாக அவரிடம் மதுபானம் வாங்கிய மதுப் பிரியர்கள் பீதியில் உள்ளனர்.