ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் திகதி தொடர்பில் தீர்மானிக்க, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், அன்றைய தினம் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச நிறுவனத்தின் 153 ஊழியர்களை சட்டவிரோதமான முறையில் பணி நீக்கம் செய்து அவர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக முன்னைய அரசாங்கத்தினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஊடாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்ணான்டோ உள்ளிட்ட மற்றும் ஒருவருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.