ஜப்பானின் ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பின் 75ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு

உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பின் 75ஆவது ஆண்டு நினைவு நாள் ஜப்பானின் ஹிரோஷிமாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக இன்று (வியாழக்கிழமை) இட்மபெற்ற குறித்த நினைவு நிகழ்வில் மக்கள் தொகை குறைக்கப்பட்டது.

குறிப்பாக ஹிரோஷிமாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அகப்பட்டு உயிர் தப்பியவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஒரு சில வெளிநாட்டு பிரமுகர்கள் மட்டும் இதில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், அந்நாட்டு நேரப்படி காலை 8:15 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மணியோசை எழுப்பப்பட்டது.

‘லிட்டில் போய்’ என்று செல்லப்பெயர் கொண்ட அணுகுண்டு 1945 ஓகஸ்ற் 6 அன்று ஹிரோஷிமாவில் வெடித்தது. இந்தத் தாக்குதலில் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகையில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை, சர்வதேச நாடுகளின் சுயநல நோக்கத்தை நிராகரிக்கவும் அணு ஆயுதக் குறைப்பை இன்னும் தீவிரமாகச் செயற்படுத்தவும் ஹிரோஷிமா நகர மேயர் வலியுறுத்தியுள்ளார்.