ஜனாதிபதியிடம் சமுர்த்திக் கடன் வட்டி வீதத்தைக்குறைப்பு செய்யுமாறு துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் கோரிக்கை

விவசாயிகள் மற்றும் வசதியற்ற வறிய மக்களுக்கு அரசாங்கத்தினால் சமுர்த்தி வங்கிகளுடாக வழங்கப்படும் சமுர்த்திக் கொடுப்பனவிற்கு அதிக வட்டி வீதங்கள் அறிவிடப்பட்டு வருகின்றன . இதனால் அவர்களது வாழ்வாதாரம் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன . 


இவ்வட்டி வீதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு , துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் உலகநாதன் பார்த்தீபன் நேற்று கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார் .
அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது , 
வறிய வசதியற்ற மக்களுக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்தி திட்டமானது விரிவுபடுத்தி பாரிய வரப்பிரசாதங்களை வழங்கியுள்ளமைக்காக தாங்கள் பாராட்டுக்குரியவராக இருக்கின்றீர்கள் . 
நான் தங்களிடம் தயவாக கேட்டுக்கொள்வது தற்போது சமுர்த்தி வங்கிகளில் ஏழைக்குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்தி கடன்களுக்காக வழங்கப்படுகின்ற வட்டி வீதமானது ஏனைய தனியார் வங்கிகள் அரச வங்கிகள் அறவிடுகின்ற வட்டி வீதங்களை விடவும் அதிகளவான வட்டி வீதங்களிலேயே வழங்கப்படுகின்றன.
வறிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக சமுர்த்தி வங்கிகளில் அதிக வட்டி வீதத்தில் வழங்கப்படுகின்ற கடன்களால் மக்கள் சிரமப்பட்டுகின்றார்கள் . ஆகவே இதனை கருத்திற்கொண்டு இவ்வட்டி வீதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இதனைப்பரிசீலனை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தெரியப்படுத்துவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .