சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம்,  காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அண்ணா  பல்கலை,  மண்டபம்  (ராமநாதபுரம் ), சென்னை நுங்கம்பாக்கம், எண்ணூர்   (திருவள்ளூர்) , மயிலாடுதுறை  (நாகப்பட்டினம்), ஆலந்தூர், சென்னை விமான நிலையம், வலங்கைமான் , பெரம்பலூர், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் அதிகபட்ச மழையளவு பதிவாகியுள்ளது.