சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை!

கடந்த 13ஆம் தேதி முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, சேலம் சென்று கொண்டிருந்தபோது,  விழுப்புரம் அருகே அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு, மூச்சு திணறலால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, முதலுதவிக்குப் பிறகு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் எக்மோ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் சென்றனர். 

இதற்கிடையே அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள துரைக்கண்ணுவின்  நுரையீரல் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கியக் குழு அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.