சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

ராஜஸ்தான் மாநிலம் பிரோகி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் தலில்சந்த் ஜெயின்(74). இவருக்கு புஷ்பா பாய் (70) என்ற மனைவியும், ஷீத்தல் ஜெயின்(40) என்கிற மகன் மற்றும் பிங்கி என்ற மகளும் உள்ளனர்.

 இவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள விநாயகர் மேஸ்திரி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். தலில்சந்த் ஜெயின் சவுகார்பேட்டையில் பைனான்ஸ் விடும் தொழில் செய்து வந்துள்ளார். மகள் பிங்கி, திருமணத்திற்கு பின்பு கணவருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிங்கி நேற்றிரவு மணியளவில் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மெத்தையில் தந்தை தலில்சந்த் ஜெயின், தாய் புஷ்பா பாய், சகோதரன் சீத்தல் ஜெயின் ஆகியோர் கழுத்தியில் அறுப்பட்ட காயங்களுடனும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் உடனடியாக யானைகவுனி காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்துள்ளது.  ஏற்கெனவே தலில்சந்த் ஜெயினுக்கு உறவினர்களோடு சொத்து தகராறு இருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தலில் சந்த் ஜெயின் குடும்பத்தினர், சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டனரா அல்லது பைனான்ஸ் தொழிலில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.