சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் வழக்குகள் நேரடியாக விசாரணை!

கொரோனா தொற்று காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 5 மாதங்களாக நேரடியாக வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை. முக்கிய வழக்குகள் மட்டும் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று முதல் வழக்கு விசாரணைகளை வழக்கம்போல் நேரடியாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கறிஞர்களுக்கு சில கட்டுப்பாடுகளும், ஆடை நடைமுறையில் விலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விசாரணைக்கு வரும் வழக்கறிஞர், கருப்பு நிற முழு கோட் அணிய தேவையில்லை என்றும், வெள்ளை நிற சட்டை மற்றும் கழுத்து பட்டை மட்டும் அணிந்து வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயர்நீதிமன்றத்தின் வடக்கு வாசல் வழியாக மட்டுமே வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வழக்கறிஞர்கள், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே நீதிமன்றத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சட்ட மாணவர்கள் நீதிமன்ற விசாரணை அறைக்கு செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் உள்ளே உள்ள நூலகம், உணவகங்கள் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.