சென்னையில் இடியுடன் கூடிய கனமழை – சாலைகளில் தேங்கிய தண்ணீர்!

வளி மண்டல மேலடுக்கு சூழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் ஈரோடு, புதுக்கோட்டை,கரூர் திருச்சி, திருப்பூர் திண்டுக்கல்,பெரம்பலூர் அரியலூர்,நாமக்கல் கள்ளக்குறிச்சி, கடலூர் விழுப்புரம்,செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், சென்னையில் பிரதான பகுதிகளில் காலை முதலே வானம் இருள்சூழ்ந்து காணப்பட்டது. பிறகு சற்று நேரத்தில் இடியுடன் கனமழை பெய்து சாலைகளில் வெள்ளம் வழிந்தோடியது. அண்ணாசாலை, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு நந்தனம், உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளிலும பலத்த மழை பெய்துள்ளது. தற்போது வரை குளிர்ந்த சீதோஷ்ண நிலையை நிலவுகிறது. மேலும் நேற்றைய வானிலை அறிக்கையின் படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.