செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மக்களுடனான கலந்துரையாடல்

கடந்த 09.09.2020 ஆம் திகதி புதன்கிழமை காலை 11 மணிக்கு செட்டிகுளம் பிரதேச சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனான சந்திப்பின் போது வைத்திய அத்தியட்சகர் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு 2019 இல் இருந்து பௌதிக ரீதியாக செய்யப்பட்ட அபிவிருத்திகளை படங்களுடன் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். அதன் போது கடந்த காலத்தில் ஏற்பட்ட சில கொரோனா மற்றும் வைத்தியர் பற்றாக்குறை போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் வைத்தியசாலை  எவ்வாறு கொண்டு நடத்த முயற்சித்தது என்பது பற்றியும் தரமான விளக்கங்களை முன்வைத்தார். 
இதன்போது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டதோடு, இவ்வாறான சமூகத்துடனான கலந்துரையாடல்களை அடிக்கடி நடத்த வேண்டும் என்பதோடு இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என்று கூறினார். 
இவ்வாறான ஒரு வைத்திய அதிகாரி பிரதேசத்திற்கு வந்து இப்படியான சேவைகளை முன்னெடுப்பது தங்கள் பிரதேசத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என தெரிவித்தனர். 
வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகளை வைத்திய அதிகாரியும் அவருடன் சேர்ந்து மேலதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். அதை வைத்திய அதிகாரி,  காலக்கிரமத்தில் நடைமுறைக்கு கொண்டு வருவதாக உறுதியளித்தார். 
இக் கலந்துரையாடலின் பின் பொது சமூகமும் விளையாட்டு கழகங்களும் மற்றும் இதர சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து வைத்திய நிர்வாகத்துடன் செயற்படுவதாக உறுதியளித்ததுடன், எதிர்வரும் 16ஆம் திகதி மேலுமொரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்து அதன் போது வைத்தியசாலைக்கு என்னென்ன செய்ய வேண்டும் யார் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க எதிர்வரும் புதன் கிழமை 16.09.2020 ஆம் திகதி இவ்வாறான ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
இவ்வைத்திய அத்தியட்சகர் தொடர்ந்தும் இங்கே இருக்க வேண்டும் அதே போல் அவர் பதவியுயர்வு பெற்றுச் சென்றாலும் செட்டிகுளம் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதும்  இச் சமூகத்தின் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டனர். உள்ளூர் அரசியல்வாதிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இப்பிரச்சினைகளை எடுத்துச்சென்று இவற்றை விரைவாக நிறைவேற்றுவதற்கு தம்மால் இயன்றவரை உதவியை செய்வதாகவும் உறுதி அளித்தனர்.