சுவநிதி திட்டத்தின் மூலம் தற்சார்பை நோக்கி சாலையோர வியாபாரிகள் முன்னேறி கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

சுவநிதி என்ற தற்சார்பு நிதி திட்டத்தின் கீழ் பயனடைந்த உத்தரபிரதேச மாநில பயனாளர்களுடன் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், முன்னர், வங்கி கடன்களுக்காக பணியாளர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது. ஆனால், தற்போது சாலையோர வியாபாரிகளை நோக்கி, வங்கியே வருகிறது என தெரிவித்தார். 

தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு கடன் பெறுவது எளிதாகி விட்டதாக கூறிய பிரதமர் மோடி, வங்கி பணியாளர்களின் சேவை மனப்பான்மை இல்லையென்றால், தற்சார்பு நிதி திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமாகி இருக்காது என குறிப்பிட்டார். தற்சார்பு இந்தியாவை நோக்கிய சாலையோர வியாபாரிகளின் பங்களிப்பை நாடு அங்கீகரிப்பதாக பிரதமர் மோடி கூறினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.