சுகாதார திணைக்களத்தினரால் பாதுகாக்கப்படும் வவுனியா மாவட்டம் – மக்களின் ஒத்துழைப்பும் தேவை

வவுனியா மாவட்டத்தில் சுகாதார திணைக்களத்தின் அனைத்து பிரிவினரின் ஒன்றிணைந்த பணியின் மூலமாக மாவட்டத்திற்குள் கொரனா நோய் பரவல் முன்கூட்டியே கண்டறியப்பட்டு தடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்களின் ஒத்துழைப்பும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கொரனா முதலாவது அலையின்போது விடுமுறையில் வந்த ஒரு கடற்படை வீரர் ஒருவருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வவுனியா நகரில் அவர் சென்ற இடங்கள் அனைத்தினையும் மூடி மக்களுக்கு தேவையான பாதுகாப்பு செயன்முறைகளை வழங்கியமையின் காரணமாக சமூக பரம்பல் ஏற்படாது கட்டுப்படுத்தியிருந்தனர்.


இந்நிலையில் மீண்டும் கொரனா அலை ஏற்பட்டபோது வவுனியா மாவட்டத்திற்குள் வருகை தந்த வெளி மாவட்டத்தவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கியிருந்தனர். இதன் காரணமாக நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டவர்களில் ஐவரை வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்த மாத்திரிகளின் பரிசோதனைக்காக அனுப்பியிருந்தனர்.எனினும் அதன் முடிவுகள் வருவதற்குள்ளாகவே வவுனியா மாவட்டத்தில் கொரனா தடுப்பு செயற்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள விசேட குழு அந்த ஐந்து போரிடமும் கொரனா பரிசோதனையை (பி.சி,ஆர்) மேற்கொண்டது.

இவர்களில் 3 பேருக்கு கொரனா தொற்று இருப்பதனை அறிந்து மேலும் 27 பேரிடம் பரிசோதனையை மேற்கொண்டதில் 2 பேருக்கு தொற்று இருப்பதனை அறிந்தமையினால் அவர்கள் வவுனியா நகரில் சென்று வந்த வர்த்தக நிலையங்கள் உட்பட அவர்கள் சென்ற வீடுகளை உடனயாடிக தனிமைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.


வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவர்களில் உயர் அதிகாரிகளுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் அனைவரிடமும் பரிசோதனையை மேற்கொள்ளும் முகமாக 83 போரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 7 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்தது.
அவர்களில் இருவர் யாழ் மாவட்டத்தவர்களாகவும் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்தவராகவும் இருந்த நிலையில் ஏனையவர்கள் தென்பகுதி மற்றும் மலையகத்தினை சேர்ந்தவர்களாக காணப்பட்டனர்.

உடனடியாக செயற்பட்ட சுகாதார பகுதியினர் அவர்கள் சென்று வந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி தனிமைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். சமூகப்பரம்பல் ஒன்றை தடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சுகாதார பகுதியினர் முன்னெடுத்த செயற்பாட்டால் அதுவரை வவுனியா மாவட்டம் சமூகப்பரம்பல் இல்லாமல் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் சுகாதார பகுதியினரின் மகத்தான சேவைக்கு ஒத்துழைக்கும் முகமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பதன் மூலமாகவும் அநாவசியமாக பயணங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை தவிர்ப்பதனாலும் எதிர்வரம் காலங்களிலும் வவுனியா மாவட்டத்தில் சமூக பரம்பல் இல்லாது தவிர்ப்பதற்கு வழி ஏற்படும் என்பதே ஜதார்த்தம்.