சீன அதிபரை ‘கோமாளி’ என விமர்சித்த பிரபல தொழிலதிபர்; ஊழல் வழக்கில் 18 ஆண்டுகள் சிறைதண்டனை!

சீன அரசுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தவர் 69 வயதான Ren Zhiqiang. இவர் பதவியில் இருந்த போது ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு 18 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக அவர், சீன அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா விவகாரம் பற்றி பேசுகையில், அதிபர் ஜி ஜின்பிங்கை ‘கோமாளி’ என விமர்சித்திருந்தார். விதிமுறைகளை மீறி கடும் வார்த்தைகளை பயன்படுத்தி வந்ததற்காகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதுமட்டுமல்லாமல் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அவர் கட்டுரைகளும் வெளியிட்டு வந்தது பரபரப்பாக பேசப்பட்டது.