சீனாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா – ட்ரம்ப் அறிவிப்பு.

கொரோனாவுக்கு எதிராக வெற்றிகரமான தடுப்பூசியை முதலில் தயாரிக்க விரும்பினால், சீனாவுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வொஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

“முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்குவதற்காக சீனாவுடன் இணைந்து செயல்பட நீங்கள் தயாரா?” என கேட்கப்பட்ட கேள்விக்கு ட்ரம்ப் பதிலளிக்கையில்,

“எங்களுக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத்தர சீனா உள்ளிட்ட எவருடனும் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது”

சாத்தியமான ஒரு தடுப்பூசி எதிர்பார்த்ததைவிட மிக விரைவில் வந்து, உடனடியாக விநியோகிக்கப்படும் எனவும் விநியோகிப்பதில் அமெரிக்க இராணுவம் உதவும் என அவர் பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தோன்றியதாகவும், சீனா ஆரம்பத்தில் இதுபற்றிய தகவல்களை மூடி மறைத்து விட்டதாகவும் சீனா நினைத்திருந்தால் கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு பரவாமல் தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என்றும் அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்து குற்றம் சுமத்தி வருகிறது.

இந்நிலையில் குறித்த விவகாரத்தில் சீனாவுடனும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி உலக சுகாதார நிறுவனத்துடனும் அமெரிக்கா கடுமையாக சாடிவந்தது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.