சீனாவினால் அண்மையில் இயற்றப்பட்ட கடலோர காவல்படைச் சட்டம் ஆபத்தானது – அமெரிக்கா கவலை

சீனாவினால் அண்மையில் இயற்றப்பட்ட கடலோர காவல்படைச் சட்டம் ஆபத்தானது என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.இந்தச் சட்டத்தால், கடல்சார் மோதல்கள் அதிகரிக்கக்கூடும் எனவும் சட்ட விரோத உரிமை கோரல்களை உறுதிப்படுத்துவதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.கிழக்கு சீனக் கடலில் ஜப்பானுடனும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் கடற்பகுதி எல்லை மோதல்களை சீனா கொண்டுள்ளது.கடந்த மாதம் கடலோர காவல்படைச் சட்டத்தை சீனா நிறைவேற்றியது. இந்தச் சட்டம், சீனாவின் கடலோர காவல்படையினர் வெளிநாட்டுக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வெளிப்படையாக அனுமதிக்கிறது.

இந்நிலையில், கடலோர காவல்படையினரால் சீன அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்களை அமுல்படுத்துவதற்கும், நடந்துகொண்டிருக்கும் பிராந்திய மற்றும் கடல்சார் மோதல்களுக்கும் ஆயுதப்படை உட்பட்ட பலத்தைப் பயன்படுத்துவதை வெளிப்படையாக இணைக்கிறது எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.அத்துடன், இந்தச் சட்டம் சீன எல்லை கடல் தொடர்புகளைக் கொண்டுள்ள அண்டை நாடுகளை அச்சுறுத்துவதற்குப் பயன்படுத்தப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும், “தென் சீனக் கடலில் சட்டவிரோத கடல்சார் உரிமை கோரல்களை உறுதிப்படுத்த சீனா இந்தப் புதிய சட்டத்தை செயற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ள அவர், இந்த உரிமைகோரல்கள் 2016ஆம் ஆண்டின் நடுவர் தீர்ப்பாயத் தீர்ப்பால் முழுமையாக நிராகரிக்கப்பட்டன எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, தென் சீனக் கடலில் பெரும்பாலான கடல் வளங்கள் குறித்த சீனாவின் சர்ச்சைக்குரிய கூற்றுக்கள் முற்றிலும் சட்டவிரோதமானது என முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் மைக் பொம்பியோ நிராகரித்திருந்தார்.இந்நிலையில், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடனான கடல் எல்லைகள் குறித்த கூட்டுச் செயற்பாடுகளில் அமெரிக்கா உறுதியாகச் செயற்படும் என நெட் பிரைஸ் கூறியுள்ளார்.இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதன் பின்னர், சீன ஜனாதிபதி ஷி ஜின்-பிங் உடனான முதல் உரையாடலில் தென் சீனக் கடல் பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.