சிக்கியது போதைக்கழுகு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘அங்கொட லொக்கா’ எனப்படும் பாதாளக்குழு உறுப்பினரால் போதைப்பொருள் விநியோகத்துக்காக பயிற்சியளிக்கப்பட்ட கழுகு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 மீகொட- நாவலமுல்ல மயான வீதி பிரதேசத்திலுள்ள அங்கொட லொக்காவுடன் நெருங்கிய நண்பரின் விலங்கு பண்ணையிலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையின் போதே இந்த கழுகு மற்றும் அங்கு பணியாற்றிய இரு பணியாளர்கள் இருவர் வாயு ரைபிளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவசாய பண்ணைக்கு உள்நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாக காட்சிப்படுத்தி அதிகளவான நாய்களை குறித்த பண்ணையைச் சுற்றி பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு  அமைய இந்த கழுகு வெளிநாடொன்றிலிருந்து படகு மூலம் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த கழுகு இலங்கைக்கு உரிய உயிரினம் அல்லவென்றும் இதனை கூட்டில் அடைத்து வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 கிலோகிராம் நிறையுடைய இந்த கழுகு எந்த இடத்துக்கும் செல்லும் வகையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கழுகு தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்துக்கு வழங்கி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பத்தரமுல்ல வனஜீவராசிகள் திடீர் சுற்றிவளைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.